சனி, 19 அக்டோபர், 2024

தேர்தல் (ஆனந்தக் களிப்பு)


ஆளுமை வித்தகர் இன்று - தாம் 

அள்ளிக்கொ டுத்தேகை கும்பிடு போட்டுச்

சூளுரை தாண்டியே பாதம் - வீழ்ந்த

சூட்சுமத் தைக்காண்பார் யாரேனும் உண்டோ?

 ~~~~~~****~~~~~~~

வரிகள்: சிறி அருணன்


#சிந்து_பாடுக 1

சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தக் கற்றலைக் கொண்டும் கூறப்படுகின்றன.

                           சிந்துப் பாடுக - 1

                           *******************

                          (ஆனந்தக் களிப்பு)

நாளுந்த மிழ்ப்படிப் பாயே★- வாழ்வில்

நன்மைகள் யாவும டைந்திடு வாயே★

ஆளும்நி லையினில் சேர்ப்போம்★ - நம்

அன்னைத்த மிழ்தனை ஒன்றாகிக் காப்போம்★!

                             பாவலர் மா.வரதராசன்

கருத்தூன்றுக :

மேற்கண்ட பாடல் வகை "ஆனந்தக் களிப்பு "ஆகும். 

மகாகவி பாரதியாரின் புகழ்பெற்ற கீர்த்தனைகளான

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்,

தீராத விளையாட்டுப் பிள்ளை,

சித்தர் பாடலான, 

நந்தவ னத்திலோர் ஆண்டி

போன்றவை இவ்வகைப் பாடல்களே. திரைப்பாடலான

கல்லிலே கலைவண்ணம் கண்டான், 

என்ற பாடலும் இவ்வகையே.

***

சிந்துப் பாடல்களை யாப்பிலக்கணத்தின்படி தேமா, புளிமா கொண்டு வகைப்படுத்த இயலாது. இசைப்பாடலான இவற்றைப் பாடிப் பார்த்து விளங்கிப் பின் எழுத வேண்டும்.


மேற்கண்ட பாடலில் ஒவ்வொரு சீரிலும் மூன்று எழுத்துகள் (ஒற்று நீக்கி) உள்ளன.

(நா ளு த) (மி ப டி) (போ மே ★) 

3,8 ஆம்சீர்கள் இரண்டெழுத்துகள் இருந்தாலும் மூன்றாவது எழுத்துக்குப் பதில் அந்த இடத்தில் நீண்டு இசைக்கும். நீண்டிசைக்கும் எழுத்து ★குறியிட்டுள்ளதைக் காண்க. (பாடலை எழுதும் போது குறியிடத் தேவையில்லை. புரிவதற்காகப் போட்டுள்ளேன்.)

நான்காவது சீர் சிறுகோடிட்டுத் தனிச் சொல்லாக வரும். பெரும்பாலும் அது ஓரசையாகவே வரும். (நம்) அல்லது (வாழ்வில்) போல தேமாச் சீர்களாக வரும்.

இருகுறில் இணைந்த சீரால் அடி தொடங்காது. அடிகளின் இடையிலும் அவ்வாறு வாராதிருத்தல் நலம். நெடில், நெடிலொற்று, குறிலொற்று இப்படியான சீர்களே வரும்.

பொது இலக்கணம் :

மேற்கண்ட பாடலின்படி...

* ஓரடிக்கு மூன்றெழுத்துச் சீர்கள் எட்டு வரவேண்டும்

* நாளுந்த என்பது முதல் வாயே என்பது வரை ஓரடி. 

ஆளும்நி என்பது முதல் காப்போம் என்பது வரை மற்றோரடி.

* இரண்டடிகளும் எதுகையால் இணைந்து (நாளும், ஆளும்)

* முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து (நா, ந) (ஆ,அ)

* அடிகளின் மூன்றாம் சீரும், எட்டாம் சீரும் இயைபு பெற்று (பாயே, வாயே)

(சேர்ப்போம், காப்போம்) ,

இந்த இலக்கணப்படி வருவது "ஆனந்தக் களிப்பு " ஆகும்.

இவ்வகையான பாடல் ஒன்றை #தேர்தல் பற்றிய கருத்தமைய வரும்  வெள்ளிக்கிழமைக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் (Coment) மட்டும் பதியவும்.

ஒருவர் ஒரு பாடலை மட்டுமே பதியவும். மற்ற பாடல்களைச் செம்மைப்படுத்த நேரமொதுக்க உதவியாகஇருக்கும்.

https://youtu.be/HiJKh5eh4AM


கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...