~~~~~~~~~~~~~
பார்த்த நொடியே
கால்மேல் கால் போட்டு
என் நெஞ்சுக் கூட்டில் நீயமர்ந்தாயடி
அன்பெனும் கயிற்றால்
கட்டியென்னை
இறுகப்பற்றி இழுத்தாயே
ஏமாற்றங்கள் கண்டு
வறண்ட என் வாழ்வில்
மழையாய் பொழிந்தவளே
அகண்ட இரவுகளில்
வாழ்ந்தவன் எனக்கு
மின்மினியுன் சிற்றொளி
போதும் கண்ணே
என் ஆறாக் கவலைகள்
மறக்கவும் தேறவும்
உன் மடிதாங்கு போதுமம்மா
என் ஆனந்தக் கண்ணீரையும்
தாங்கிட ஒப்பாத உன்னன்பை
என்னவென்று சொல்ல?
நேர்மைக்கு நேராய்
நேர்த்தியாக வழிநடத்தும்
என் திசைகாட்டியே நீதானடி
என் நியாயமற்ற
கோபங்களை அடக்கும்
காதல் அங்குசமாய்
நீயொருவள் மாத்திரமே
நான் காணும்
உயரங்கள் அத்தனையும்
உன் ஆலோசனையின்
அறுவடை என்றாலும் தகுமே!
வெற்றுப் பண்டம் என்னில்
அறுசுவையோடு கூடிய
அருமருந்தாய் ஆனவளே
என் கனவுகள்
உயிர் கொண்டால்
உன்னுருவில்தான்
நடமாடுமோ?
என் தலைமுறை நீடிக்க
என்னில் கருவெடுத்து
உருகோர்த்த தாயுமானவளே
தலைக்கன ஆடவனிவன்
வாழ்விலக்கணம் நிம்மதி
என்றானது உன்னாலே
கல்வியும் உழைப்பும்
கண்ணிரெண்டாய்
உணர்த்திய ஒளிவிளக்கே!
செஞ்சுடரைப் பற்றிய
பூமியாய் சுழலுகிறேன்
ஒருக்கணித்தே உன்னில்
என்னில் பாதி
நீயில்லையடி.!
நீக்கமற வியாபித்திருக்கும்
முற்றில்லா முழுமையே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக