அன்னையே நீ
அன்பில் தெளிதேன்
என்பேன்
*
என் கருவுருவைக்
கண்காணும் முன்னே எனை
நீக்கமற நேசித்தவள் நீயே!
*
என்னிதையத் துடிப்பினை
உள்ளார உணராத கணங்கள்
துடிதுடித்துப் போவாய்
*
வயிறுள்ளே
என் எத்தலுக்கும் துள்ளலுக்கும்
கண்ணைச் சுருக்கிப்
புன்னகையோடு வலிகடந்தாய்
*
என்னுருவம் செம்மையாக
பத்தியங்கள் பொறுத்து
தூக்கந் தொலைத்துச்
சுமை தாங்கிய தேவதாயே!
*
ஒப்பனைத் திரவியங்கள் பூசி
பத்திரமாய்க் காத்த மேனியதை
எனக்காய் உருக்குலைய ஏற்றாயே!
*
பிண்டத்தை பீறிடும் பிரசவ வலியை
என்பேரில் சகித்ததை
எண்ணி எண்ணியே
மெய் சிலிர்க்கிறேன்!
*
முப்பொழுதும் எனை
உருவாகும் கற்பனையில்
உன் வாழ்நாள்களை
கிரையந் தந்தாயே!
*
எவர் என்மீது முறுமுறுக்கினும்
கோழிதன் செட்டைக்குள்
மூடும் குஞ்சாய்க் காத்த
அருந்தவமே
*
உன் திராணிக்கு மிஞ்சும்
என் ஆசைகளுக்கு
‘நாளைக்கு’ என்ற நம்பிக்கையின்
மறுமொழி கொடுத்தவளே
*
வாழ்க்கை வெறுத்த
சூழ்நிலைகளில் என் முகங்கண்டு
எனக்காய்ப் பாடுகள் பொறுத்து
சாதலை மறுத்த சகியே
*
வாழ்வுதன் ஏற்ற இறக்கங்களில்
சறுக்காது ஓடிட
மலையாட்டின் கால்களைப் போல்
நெஞ்சுரத்தை எனக்கு
தாய்ப்பாலில் ஊட்டிய தமிழிச்சியே
*
உன்னதத்தினின்று
எனக்காய் இறங்கிய
தீரா நேசமவள் எப்பொழுதும்
என் அவனியில் தெய்வம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக