புதன், 11 டிசம்பர், 2024

வெண்கலிப்பா


காத்திடல் கொடுத்திடலாம் 
கடுஞ்சோர்வு நிதமுனக்கே
காத்திரு உறுமீன்தான் 
கையிழுக்கும் அதுவரையில்
காத்திரம் மிகுவிதைப்பே 
களஞ்சியத்தை நிரப்பிடுமாம்
காத்திடு கையிருப்பே கண் !
~~~~~~~~******~~~~~~~~
வரிகள்: சிறி அருணன்

கருத்தூன்றுக.:
*** *** *** ***
மேற்கண்ட பாடல் "வெண் கலிப்பா" ஆகும்.
வெண்பாவைப் போல் ஈற்றடி அமைவதாலும், வெண்டளை கொண்ட சீர்களாலும் அமையும் தன்மை நோக்கி இப்பெயர் வந்தது.

"வெண்கலிப்பா" வேறு..."கலிவெண்பா " வேறு.

கலித்தளையானும், வெண்டளை விரவியும், ஆசிரியத் தளை விரவியும் வருவது "வெண்கலிப்பா "

வெண்டளை மட்டுமே கொண்டு வருவது "கலிவெண்பா" ஆகும்.

இப் பாவகை அவ்வளவாக எழுதப்பெறுவதில்லை. நாம் எழுதிப் பரப்பலாம்.

மேற்கண்ட பாடல் தன் தளையானும் (கலித்தளை) , ஆசிரியத் தளையானும் அமைந்த வெண்கலிப்பா. (காய்முன் நிரை வருவது கலித்தளை.) 

வெண்டளை விரவி வருவதுமுண்டு. 
ஆனால் மாச்சீர்களும், நிரைநடுவஞ்சிச் சீரும் வாரா.

பொது இலக்கணம்.
*** *** *** ****** *** *** 
* நான்கு சீர்கள் கொண்டதாய்,
* நான்கு அடிகள் முதல் பல அடிகளைக் கொண்டதாய், (பயிற்சிக்கு நான்கடிகளே போதும்) 
* முதல் சீரும், மூன்றாம் சீரும் மோனையால் இணைந்து,
* இரண்டு அடிகளுக்கு ஒரு எதுகையைப் பெற்றும்,
* ஈற்றடி வெண்பாவைப் போல் முச்சீராய், 
* ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு இவற்றில் ஒன்றைக் கொண்டும்,
* கலித்தளை(தன் தளை)யானும், கலித்தளையுடன் வெண்டளை விரவியும், (பயிற்சிக்குக் கலித்தளையே கொள்க) 
வருவது "வெண் கலிப்பா" எனப்படும்.

இவ்வகையான ஒரு பாடலை வரும் வெள்ளிக்கிழமை நண்பகலுக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில்(comment) மட்டுமே எழுதி அனுப்புங்கள். 

-பாடத்தொகுப்பு: பாவலர் மா.வரதராசன் 

                                    ★★★

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...