சனி, 2 நவம்பர், 2024

நேரிசை வெண்பா


என்னவன் தோள்தனி
லென்தலை சாய்ந்திட
எத்தனை வல்லிய பாடுக ளோ
தென்னவன் அன்பினுள் 
அப்பழுக் குக்காணேன்
தீராஅன் பிற்குழை யுந்தன யன்

             பாடல்: சிறி ஆரோன்

              ( நேரிசை வெண்பா)

புன்னை நறுமலரின் பூந்தா திடையுறங்கும்

கன்னி இளமேதிக் காற்குழம்பு - பொன்னுரைத்த

கல்லேய்க்கும் நாடன் கவறாடப் போயினான்

கொல்லேற்றின் மேலேறிக் கொண்டு.

                         - நளவெண்பா

🔲வெண்பாவின் வகைகள்.,

குறள் வெண்பா.(ஈரடிகளால் அமையும்) 

சிந்தியல் வெண்பா.(மூவடிகளால் அமையும்) 

இன்னிசை வெண்பா.(நான்கடிகளால் அமையும்) 

நேரிசை வெண்பா.(நான்கடிளால் அமையும்) 

பஃறொடை வெண்பா (ஐந்தடி தொடங்கிப் பன்னிரண்டு அடிவரை அமையும்) 

கலிவெண்பா.(பன்னிரண்டு அடிகள் தொடங்கி அளவில்லாமல்))

🔲பொது இலக்கணம்.

****-*******************

🔷 நான்கடிகளைப் பெற்று,

🔷மூன்றடிகள்  நான்கு சீர்களும். ஈற்றடி மூன்று சீர்களும் பெற்று,

🔷 ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஓரசைச் சீராய், நாள், மலர், காசு, பிறப்பு எனும் வாய்பாடுகளுள் ஒன்றினைக் கொண்டு முடிந்தும், ( சான்று பாடலில் கொண்டு எனும் சொல்லில் முடிந்த ஈற்றுச்சீர்  "காசு" எனும் வாய்பாட்டில் முடிந்தமை காண்க) 

🔷ஒன்று, மூன்றாம் சீர்களில் மோனையும், (சான்று பாடலில், பு--பூ   க-- கா, க--க,   கொ -- கொ  )

🔷இரண்டடிகளுக்கு ஒரு எதுகையும் (நான்கடிகளும் ஓரெதுகை பெற்றும் வரலாம்) 

புன்னை - கன்னி - பொன்னுரைத்த,

கல்லேய்க்கும் - கொல்லேற்றின்

🔷இரண்டாம் அடியின் நான்காம் சீர் "தனிச்சீர்" எனப்படும். அந்தச் சீருக்கும் மூன்றாம் சீருக்கும் இடையே ஒரு சிறு கோடிருக்கும். தனிச்சீர் முதலிரண்டு அடிகளின் எதுகையைப் பெற்றிருத்தல் ★கட்டாயம்.( சான்று பாடலில்.... பொன்னுரைத்த)  

எதுகையில்லாத் தனிச்சீரும் சிறுகோடும் இல்லையேல் அஃது "இன்னிசை வெண்பா" எனப்படும்

★வெண்டளை மட்டுமே பயின்று வரக்கூடிய சீர்களைப் பெற்று

    வருவது "நேரிசை வெண்பா "ஆகும்.

++++++++++++++++++++++++++++++

🔶வெண்டளைக்கான சூத்திரம் : 

காய்முன்நேர், விளம்முன்நேர், மாமுன்நிரை

++++++++++++++++++++++++++++++

     இந்த மூன்று வகையான தளைகளைக் கொண்ட சீர்களேயன்றி வேறெந்தச் சீர்களும் வெண்பா வகைப் பாடல்களுக்கு வருதல் கூடாது. இந்தச் சூத்திரம் அனைத்து வெண்பா வகைகளுக்கும் பொதுவானதாகையால் நன்கு நினைவில் நிறுத்தவும்.

1. காய்ச்சீருக்கு அடுத்து நேரசையில் தொடங்குவது "காய்முன்நேர் "

2. விளச்சீருக்கு அடுத்து நேரசையில் தொடங்குவது "விளம்முன்நேர் "

3. மாச்சீருக்கு அடுத்து நிரையசையில் தொடங்குவது "மாமுன்நிரை "

இவ்வகையான நேரிசை வெண்பா ஒன்றை வரும் வெள்ளிக்கிழமைக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் மட்டும்  எழுதியனுப்புங்கள்.

நன்றி...

ஆசான்: பைந்தமிழரசு பாவலர் மா வரதராசன்

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...