மத்தாப்பாய் ஒளிர்ந்து
வானமெல்லாம்
வண்ண வேடிக்கை
மனதுக்கு நிறைவாய்
நிறைவான மனிதர்
நெஞ்சத்தே
ஒளிந்திருப்பதில்லை
பிறன் வீழ்த்தும் வஞ்சகம்
வஞ்சகர் அவர்தாம்
வாழ்க்கையில் எல்லைவரை
முயன்றாலும் நல்லிடம்
சேர்வதேது?
சேருவர் இடம்பார்த்தே
உன்னை என்னை
அளவிடும் இச்சமூகம்
இன்னாரென்று.!
இன்னாரென்று
குலங்காண பிறப்பில்ல
அளவீடு கொண்டுணர்தல்-நம்
வாய்மொழி வார்த்தைதானே!
வார்த்தைகள்
செம்மைப்படின்
வாழ்க்கை மேல்ச்சிறந்து
நற்பெயர் நாளும் சூழுமே!
சூழும் நன்மக்கள்
எண்ணுதலும் வாழ்த்துதலும்
அழகுறச் செய்திடும்
நாம் நோக்கும் காரியந்தனை
காரியம் சகலதும் வாகைசூடும்
வளமுள்ள உள்ளங்கள்
தாமுவந்து ஈனும்
கொடைதனிலே!
கொடைதனை
பூமிபார்க்கக் கொடுத்துச்
சிவந்த கைகளுக்கு
சீவியத்தில் குறைவில்லை
குறைவில்லை
பஞ்சம் பட்டினிக்கும்
பூவுலகில் கையிருப்போர்
மனது குறுகிக் கஞ்சராயிருக்க
கஞ்சரிவர் உலகையே
ஆதாயங் கொண்டும்
வெறுங்கையே மூடுவர்
இறுதி ஊர்வலத்தில்!
ஊர்வலப் பல்லாக்குகளும்
சுயமும் வெறுத்து
மனிதருள் மாணிக்கமானோரை
உளஞ்சுமந்தே மகிழ்வோம்.
~~~~~***~~~~~
வரிகள்: சிறி ஆரோன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக