சனி, 30 அக்டோபர், 2021

முட்டாட்களின் உலகமிது !

பச்சிளம் குழந்தைகட்கு சாதியின் 

பெயர் சொருகி கூடவே..

பாடசாலையின் நுழைவுப் பத்திரத்திலும்

சாதி__என்று நிரப்பிவிட்டு.! 

"சாதிகள் இல்லையடி பாப்பா"என்று கற்பிக்கும் 

முட்டாட்களின்  உலகமிது !

<<>>

பெற்றோர்தம் குழந்தைகள் புலனெட்ட

புறம்பேசி, அறங்கோணி

கொடுவார்த்தைகளில் கேடுபுணர,

அந்தகாரத்தின் நடையேறுகளை 

நாணமின்றி சரளம் புழங்கி,

மறந்தேனும் எவர்க்குமீணாது..

தன்பிள்ளையை ஒழுக்கசீலனாய் காணவெண்ணும்

முட்டாட்களின்  உலகமிது !

<<>>

நீ யார்க்கும் நற்றுணை ஈணாய்- ஆனால்

உன் பட்சத்தில் நல் ஈவு வேண்டும்.

நீ யாரையும் தேற்றிடாய்;

உனக்கு உற்றசுற்றம் வசமேக வேண்டும் .

நீதிநியாயம் நீயறியாய்- இருந்தும்

உனை அநியாயம் ஏகிட ஒப்பிலாய்- அய்யகோ..

முட்டாட்களின்  உலகமிது !

<<>>

எச்சில்க்கை நீண்டு நீ காக்கை விரசாய்- ஆனால்

உன்கை வானம்பார்க்க மறுகணம் நிரம்பிடனும்.

உன் துவாரக்குடம் பொற்சமானம்

பிறன் பொன்னது தெருக்களியாகிடுமோ.?

காக்கை உன்குஞ்சு பொன்னென்றால்

அன்னத்தின் குஞ்சென்ன அழுக்கா- அட

முட்டாட்களின்  உலகமிது !

<<>>

சீவனோடு இருக்கும் காலமெல்லாம்

வார்த்தைக்காச்சும் சுகங்கேளாதவன்- நீ

பச்சைத்தண்ணீர் தானும் உறவுகட்கு பருக்கத்தராதவன்- நீ

இன்னான் செத்த பின்பு எதற்கு பெரும் படையலும்

பூப்பாடையும், ஓலமிட்டு முதலைக் கண்ணீரும் சொரிகிறாய்.?

முட்டாட்களின்  உலகமிது !

<<>>

ஓடியோடி உழைத்து, உண்ணாது உறங்காது

உத்தமமாய்ப் படிக்கவைத்த பிள்ளைகளை

கண்டவரின் கால்பிடித்து தூரதேசம் அனுப்பிவைத்து

சாவையும்.. வாழ்வையும்.. தொலைபேசியில் அனுபவித்து

காகிதக்காசைக் கட்டிப்பிடித்து நீயுறங்கி;

ஊரெல்லாம் வாய்கிழிய பெருமைபேசி என்னப்பயன்

உன்சாவுக்கு வராத உறவால்?

முட்டாட்களின்  உலகமிது !

<<>>

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...